கவாஸ்கர் பெயரில் தொடர் நடத்துறீங்க.. ஆனா அவருக்கே அழைப்பு இல்லையா? ஆஸி. கிரிக்கெட் செய்த குழப்பம்
மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கோப்பை வழங்கும் விழாவில் கவாஸ்கர் பங்கு பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பார்டர் - கவாஸ்கர் விருது என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், தன் பெயரில் நடத்தப்படும் தொடரின் கோப்பை வழங்கும் நிகழ்வில் கவாஸ்கர் பங்கு பெற மாட்டார் என கூறப்படுகிறது.

பெருமை அளிக்கும் பெயர்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடருக்கு 1996 முதல் பார்டர் - கவாஸ்கர் ட்ராபி என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. முதன் முதலில் இவர்கள் இருவருமே டெஸ்டில் 10,000 ரன்களுக்கு மேல் கடந்தவர்கள். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் பெயரில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

பார்டர் கலந்து கொள்வது உறுதி
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களின் ட்ராபி வழங்கும் விழாவில் இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ கலந்து கொள்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கோப்பை வழங்கும் விழாவில் ஆலன் பார்டர் கலந்து கொள்வது மட்டுமே உறுதியாகி உள்ளது.

மே மாதம் கடிதம்
கவாஸ்கர் கலந்து கொள்ள தனக்கு சரியான அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார். அதனால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது. கடந்த மே மாதம், கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கோப்பை வழங்கும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என கோரி அப்போதைய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் கடிதம் எழுதியுள்ளார். எனினும், அதன் பின்னர் நடந்த குழப்பங்களால் கவாஸ்கர் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது.

மாற்றங்கள் தான் காரணம்
பந்து சேத விவகாரத்தின் பின் விளைவாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் மற்றும் பல நிர்வாகிகள் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இந்த மாற்றங்களுக்கு பின், கவாஸ்கருடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இனி அழைப்பு வந்தால்..
இதன் காரணமாகவே கவாஸ்கர் கலந்து கொள்ள மாட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது. கவாஸ்கர் தற்போது டெஸ்ட் தொடரின் இந்திய ஒளிபரப்பில் வர்ணனை செய்ய மும்பையில் இருக்கிறார். கடைசி டெஸ்ட் நாளை துவங்க உள்ள நிலையில், இனிமேல் அழைப்பு வந்தாலும் கவாஸ்கர் செல்வது முடியாத காரியம்.


Click it and Unblock the Notifications