அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், அவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தான் களமிறங்குவார் என்று தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்தார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய அவர், பவுண்டரியை தடுக்க முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன்பின் அவர் உலகக்கோப்பை விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியின் சமநிலை பாதிக்கப்பட்டது.

ஏனென்றால் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணி 6 பேட்ஸ்மேன், 5 பவுலர்களுடன் களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி தவித்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் எப்போது ஏன்று இந்திய அணி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா இல்லாமல் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதன்பின் ஹர்திக் பாண்டியா மீண்டு வருவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைய அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா நேரடியாக அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக விளையாடவுள்ளார்.
இதனால் தென்னாப்பிரிக்கா டி20 தொடர், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவற்றில் ஹர்திக் பாண்டியா கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளதால், ஹர்திக் பாண்டியா நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரில் தான் இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் பிசிசிஐ முக்கியமான சிக்கலில் சிக்கியுள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 அணி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய கேப்டனை தேட வேண்டிய சூழலுக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கேப்டன்சிக்கான ரேஸ் இந்திய அணி வீரர்களிடையே சூடுபிடித்துள்ளது.