என்ன கேப்டன் கோலி.. ஈஸியா ஜெயிக்க வேண்டிய போட்டியை இப்படி பண்ணிட்டீங்களே?
மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஃபாலோ-ஆன் கொடுக்காமல் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. ஆனால், அந்த முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

முதல் இன்னிங்க்ஸ் 443 ரன்கள்
முதல் இன்னிங்க்ஸில் புஜாரா சதம் அடிக்க, மாயன்க், கோலி, ரோஹித் அரைசதம் அடிக்க இந்தியா 443 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது, அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ரா புயலில் சிக்கி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மீண்டும் பேட்டிங்
இந்தியா 292 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஃபாலோ-ஆன் கொடுத்து ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தி இன்னிங்க்ஸ் வெற்றி பெறும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

ரசிகர்கள் போட்ட வெற்றிக் கணக்கு
இந்தியா தேவையில்லாமல் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடினாலும் பரவாயில்லை. விரைவாக ரன் சேர்த்து 450 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயித்து 150 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் கொடுத்து 10 விக்கெட்களையும் இந்தியா வீழ்த்தும் என ஒரு கணக்கு போட்டு ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதிர்ச்சி அளித்த பேட்ஸ்மேன்கள்
ஆனால், அதற்கு மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் சில ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்காமல் விக்கெட்களை இழந்துள்ளனர். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஹனுமா 13, புஜாரா 0, கோலி 0, ரஹானே 1, ரோஹித் 5 என வரிசையாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

டக் அவுட் ஆன முக்கிய வீரர்கள்
இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்துள்ளது. ரிஷப் பண்ட், மாயன்க் சமாளித்து பேட்டிங் செய்து வருகின்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த புஜாராவும், கோலியும் டக் அவுட் ஆனது சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

கம்மின்ஸ் அசத்தல்
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 6 ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். ஹேசல்வுட் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியுள்ளதால், மூன்றாம் நாளில் மட்டும் 15 விக்கெட்கள் வீழ்ந்துள்ளது.

எளிதான வெற்றி போச்சே!
ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்திருந்தால் கோலி பேட்டிங் முடிவை எடுத்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட வைத்து இருந்தால், இந்தியாவின் வெற்றி எளிதாகி இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

கோலியின் குழப்பமான முடிவு
முதல் இன்னிங்க்ஸில் ஏன் அவசர அவசரமாக டிக்ளர் செய்தார்? இரண்டாம் இன்னிங்க்ஸில் ஏன் மீண்டும் இந்தியாவை பேட்டிங் ஆடவைத்தார்? கோலியின் முடிவுகள் குழப்பத்தில் தான் முடிந்துள்ளது. கோலியின் தலைமை மீண்டும் ஒருமுறை சறுக்கியுள்ளது.

400 ரன்கள் இலக்கு
இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நான்காம் நாள் இந்தியா எத்தனை ரன்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை. குறைந்தது 400 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயிக்க இந்தியா முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications