ராகுலை வைத்து 143 ஆட்டம் ஆடிய விராட் கோலி.. கடும் குழப்பத்தில் இந்திய அணி.. என்ன தான் நடக்குது?
மொஹாலி : இந்திய அணியில் ராகுல் யார்? இந்த கேள்விக்கான பதிலாக துவக்க வீரர் என நாம் நினைத்திருந்தால், அதற்கு மாறாக பல சம்பவங்கள் நான்காவது போட்டியில் நடந்தது.
அவர் எந்த இடத்தில் இறங்குவார், அவர் யாருக்கு மாற்று வீரர்.. என்பதில் கடும் குழப்பத்தில் அணி நிர்வாகம் இருப்பது தெளிவாக தெரிகிறது. சரி, அது என்ன 143 ஆட்டம்? ராகுல் பேட்டிங் வரிசை பற்றி இந்திய அணியில் இருக்கும் குழப்பம் தான் அது.

மாற்று துவக்க வீரர்
நான்காவது போட்டிக்கு முன்பு வரை இந்திய அணியில் ராகுல் முதல் இடத்தில் துவக்க வீரராக இறங்குவார். ரோஹித் சர்மா - தவானுக்கு மாற்று வீரராக அணியில் செயல்படுவார் என கூறப்பட்டது.

அம்பதி ராயுடு இடத்தில்..
எனினும், நான்காவது போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு மாற்று வீரராக அணியில் களமிறங்குவார் என கூறப்பட்டது. 4வது இடத்தில் பேட்டிங் செய்து வந்த அம்பதி ராயுடு முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதே இதற்கு காரணம்.

விஜய், பண்ட் எங்கே?
அவருக்கு மாற்று வீரராக விஜய் ஷங்கர் அல்லது ரிஷப் பண்ட் இறங்குவர் என நினைத்த பலருக்கும் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய ராகுல் பெயர் இடம் பெற்றது ஆச்சரியமாக அமைந்தது.

மாறாக நடந்தது
சரி, போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு மாற்றாக சிறப்பாக செயல்படுவாரா என பார்க்கலாம் என நினைத்தால் அதற்கு மாறாக வேறொன்று நடந்தது. ரோஹித் - தவான் அதிரடி கூட்டணி 193 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்து வெளியேறினார்.

3வது இடத்தில் ராகுல்
3வது இடத்தில் களமிறங்க வேண்டிய கோலிக்கு பதில் ராகுல் களமிறங்கினார். இது என்னடா என மனதை தேற்றிக் கொண்டு, "ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டி ராகுலை இறக்கி இருப்பார்கள். ராகுல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கப் போகிறார்" என பார்த்தால், தவானுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தார் ராகுல்.

நிதான ஆட்டம்
தவான் ஆட்டமிழந்து சென்ற பின்னும், அதிரடி ஆட்டம் ஆடாமல் நிறுத்தி நிதானமாக ஒற்றை ரன்களை சேர்த்து வந்தார் ராகுல். 31 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார். மொத்தமே ஒரு ஃபோர் தான் அடித்திருந்தார்.

கோலியின் 143 ஆட்டம் வீண்
தன் 3வது இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்த கோலி, 4வது இடத்தில் களமிறங்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆக, மொத்தத்தில் ராகுல் பேட்டிங் செய்ய 1வது இடம், 4வது இடம் என ஆட்டம் காட்டி 3வது இடத்தில் களமிறக்கி (அதாங்க.. 143 ஆட்டம்) சொதப்பியுள்ளார் கேப்டன் கோலி.


Click it and Unblock the Notifications