ராகுலை ஆஸி.வில் வைச்சு என்ன பண்ணப் போறீங்க? இந்தியாவுக்கு அனுப்பி விடுங்க.. கடுப்பான கவாஸ்கர்
மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல், முரளி விஜய் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதில் முரளி விஜய் சில உள்ளூர் போட்டிகளில் நன்றாக ரன் குவித்தார். ஆனால், ராகுல் கடந்த ஒரு வருடமாக ஆடிய போட்டிகளில் மிக சொற்ப ரன்கள் தான் எடுத்துள்ளார் என்பதால் அவரை அணியில் இருந்து நீக்கக் கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முரளி விஜய் - மாயங்க் இறங்கலாம்
கவாஸ்கர் ஒரு படி மேலே போய் ராகுல் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார். எப்படியும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. முரளி விஜய் - மாயங்க் அகர்வாலை துவக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

ரஞ்சி தொடரில் ராகுல் ஆடணும்
ராகுல் எப்படியும் அணியில் இடம் பிடிக்க முடியாது என்றால் அவரை ஏன் இன்னும் அணியில் வைத்து இருக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. அவரை இந்தியாவிற்கு வர வைத்து ரஞ்சி தொடரில் ஆட வைக்க வேண்டும். அப்போது தான் அவர் தன் இழந்த ஃபார்மை மீட்க முடியும் எனவும் கவாஸ்கர் தெரிவித்தார்.

கவாஸ்கர் யோசனை
அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் அது அணிக்கு தான் நன்மை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், உத்தேச அணியில் இடம் பிடித்து களம் இறங்காமல் இருப்பது ஒரு வீரரை பாதிக்காது. மாறாக, உத்தேச அணியில் கூட இடம் இல்லாமல் இருப்பது தான் அவரை பாதிக்கும். அப்போது தான் தன்னை நிரூபிக்க தேவையான பயிற்சிகளில் ஈடுபடுவார் என யோசனை கூறினார்.

19 வீரர்கள் தேவையா?
இந்திய உத்தேச அணியில் தற்போது 19 வீரர்கள் இருக்கிறார்கள். முன்பு 14-15 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால், இப்போது அளவே இல்லாமல் 19 வீரர்களை அழைத்து செல்வது தேவையில்லாத ஒன்று என விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications