16 ஆண்டு கால டிராவிட் சாதனை முறியடிப்பு.. வேற சாதனை ஏதாவது பாக்கி இருக்கா? கெத்து காட்டும் கோலி
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, டிராவிட்டின் 16 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கோலி 82 ரன்கள் அடித்தார். அதன் மூலம் டிராவிட் சாதனை ஒன்றையும் முந்தினார்.

டிராவிட் சாதனை
டிராவிட் கடந்த 20௦2ஆம் வருடம் ஒரே ஆண்டில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அந்த ஆண்டில் டிராவிட் வெளிநாட்டு டெஸ்ட்களில் 1137 ரன்கள் எடுத்து இருந்தார்.

16 ஆண்டு கால சாதனை
கோலி 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் எடுத்த 82 ரன்களை சேர்த்து சரியாக 1138 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் டிராவிட்டின் 16 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள்
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி இதுவரை 5 இன்னிங்க்ஸ்களில் 259 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் ஐந்து போட்டிகளில் 593 ரன்கள், தென்னாபிரிக்க தொடரில் 3 போட்டிகளில் 286 ரன்கள் என இந்த ஆண்டு நடந்த அத்தனை வெளிநாட்டு தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினார் கோலி.

சரியாக 82 ரன்கள்
இந்த போட்டி துவங்கும் முன் கோலி சரியாக 82 ரன்கள் எடுத்தால் டிராவிட் சாதனையை முந்துவார் என கூறப்பட்டது. கோலியும் சரியாக 82 ரன்கள் அடித்தவுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸ் மீதமிருப்பதால் கோலி 1138 ரன்களை காட்டிலும் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

கோலி முதல் இடம்
2018ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கோலியே தட்டிச் சென்றுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 1322 ரன்கள் அடித்துள்ளார் கோலி. புஜாரா 837 ரன்கள் அடித்து இதே பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications