சச்சினை காலி பண்ணியாச்சு.. அடுத்தது டிராவிட்.. ஜாம்பவான்களை ஊதித் தள்ளப் போகும் கோலி
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார்.
அதன் வரிசையில் அடுத்து டிராவிட் சாதனை ஒன்றை முறியடிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அந்த சாதனையை கோலி முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது, அது என்ன சாதனை? வாங்க பார்க்கலாம்.

டிராவிட்டின் 2002 சாதனை
டிராவிட் கடந்த 2002ஆம் ஆண்டில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1137 ரன்கள் அடித்து இருந்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை செய்து இருந்தார்.

அடுத்த இடத்தில் அமர்நாத்
டிராவிடுக்கு அடுத்த இடத்தில் மொஹிந்தர் அமர்நாத் இருக்கிறார். அவர் ஒரே ஆண்டில் 1065 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த சாதனையை 1983ஆம் ஆண்டில் செய்து இருந்தார் அமர்நாத். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது கோலி இருக்கிறார்.

கோலி இந்த ஆண்டில்..
கோலி இன்னும் சில நாட்களில் முடியப் போகும் 2௦18ஆம் ஆண்டில் இதுவரை 1056 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டின் கடைசி போட்டியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளார் கோலி.

டிராவிட் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி 82 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டிராவிட்டை முந்தி வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை தனதாக்கிக் கொள்வார்.

சச்சின் சாதனை முறியடிப்பு
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி தன் 25வது டெஸ்ட் சதம் அடித்து கலக்கினார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆறு சதம் அடித்து இருந்த சச்சினின் சாதனையை முந்தினார். அடித்து டிராவிட், அமர்நாத் சாதனையை குறி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications