பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 205 பந்துகளில் சாதனை படைத்துள்ளார். இந்த சதத்தின் மூலமாக பெர்த் மைதானத்தில் சதம் விளாசிய இந்திய வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி வரிசையில் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 104 ரன்களில் ஆல் அவுட்டாக, 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 2வது நாள் ஆட்டத்தை போல் நிதானமாக ரன்களை சேர்க்க, சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 205 பந்துகளில் சிக்சருடன் தனது 4வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1967-68ல் நடந்த டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணியின் ஜெய்சிம்ஹா 101 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இதன்பின் 1977-78ல் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 113 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார்.
கிட்டதட்ட 46 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இருக்கிறார். இந்த 3 சதங்களிலும் ஒரு ஒற்றுமையும் இருக்கிறது. அது என்னவென்றால், 3 சதங்களுமே 2வது இன்னிங்ஸில் அடிக்கப்பட்டவை தான். அதேபோல் பெர்த் மைதானத்தில் சதம் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக 1977ல் சுனில் கவாஸ்கர், 1992ல் சச்சின் டெண்டுல்கர், 2018ல் விராட் கோலி ஆகிய மூவரும் பெர்த் மைதானத்தில் சதம் விளாசி இருக்கின்றனர். அதேபோல் இந்த மூவரும் தான் கடந்த 35 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்து வருகின்றனர். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் 22 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசிய 5வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் வினோத் காம்ப்ளி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பட்டியலில் 4 மும்பை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.