கேவலமாக பேசிய ஆஸி. முன்னாள் வீரர்கள்.. பேட்டால் பதிலடி கொடுத்த மாயங்க் அகர்வால்
Recommended Video

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாயங்க் அகர்வால் அறிமுகம் ஆனார்.
இவர் களத்தில் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் வர்ணனையில் அவமானப்படுத்தும் வகையில் பேசினார்கள்.
அதை கேட்டு இந்திய ரசிகர்கள் பலர் ட்விட்டரில் பொங்கித் தீர்த்துள்ளார்கள். மாயங்க் அகர்வால் அவர்களின் பேச்சை தவிடு பொடியாக்கும் வகையில் அச்சுறுத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்து அரைசதம் கடந்தார்.

முன்னாள் வீரர்கள் மோசமான பேச்சு
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கெர்ரி ஓ'கீஃபே மற்றும் மார்க் வாஹ் தங்கள் வர்ணனையின் போது மாயங்க் அகர்வாலின் உள்ளூர் போட்டி செயல்பாடு பற்றி குறைத்து மதிப்பிடும் வகையில் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறிய விஷயங்கள் மாயங்க்கையும், இந்திய உள்ளூர் போட்டிகளின் தரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் இருந்தது.

கான்டீன் ஊழியர்களுடன் ஆடினாரா?
கெர்ரி கூறுகையில் மாயங்க் அகர்வால் ரஞ்சி தொடரில் அடித்த 300 ரன்கள் கான்டீன் ஊழியர்கள் அல்லது வெயிட்டர்களுக்கு எதிராக அடித்ததாக இருக்கும் என மிக மோசமான ஒரு தாக்குதலை தொடுத்தார். இந்திய உள்ளூர் போட்டிகள் அத்தனை தரமில்லை என்பதற்காக இப்படி கூறினார் கெர்ரி.
அங்க 50 சராசரி, இங்க அது 40
மார்க் வாஹ் மாயங்க் அகர்வாலின் முதல் தர போட்டிகள் சராசரி 50-ஐ ஒட்டி இருப்பதை குறிப்பிடுகையில், இந்திய உள்ளூர் போட்டிகளில் 50 ரன்கள் என்பது ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் 40 ரன்களுக்கு சமம் என குறிப்பிட்டார். இது இந்தியாவை மட்டம் தட்டுவது போல இருந்தது.

மாயங்க் அகர்வால் பதிலடி
இவர்கள் ஒரு பக்கம் இப்படி பேச, மறுபுறம் மாயங்க் அகர்வால் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் புதிய வீரர்கள் என்பதால் ஹனுமா விஹாரி மற்றும் மாயங்க் அகர்வாலை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார்கள். அதை சமாளித்து ஆடிய மாயங்க் அரைசதம் அடித்தார்.


Click it and Unblock the Notifications