தலையில் தூக்கி வைக்க வேண்டிய கோப்பை அது.. அதைப் போய்.. முகமது ஷமி கடும் அதிருப்தி
மும்பை : உலகக்கோப்பை என்றால் பெரிய மரியாதை இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை மீது காலை வைத்துக் கொண்டு இருந்த சம்பவம் குறித்து இந்திய வீரர் முகமது ஷமி தனக்கு மனம் வலிப்பதாக கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்தியா பேட்டிங்கில் சொதப்பி, பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது.
வெற்றி பெற்ற பின் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை தங்கள் ஓய்வறைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே மிட்செல் மார்ஷ் கையில் பாட்டிலில் ஒரு பானத்தை அருந்திக் கொண்டே, உலகக்கோப்பை மீது காலை வைத்து இளைப்பாறிக் கொண்டு இருந்தார். அவர் மது அருந்திய நிலையில் இருந்தாரா? என்பது தெரியவில்லை.

மிட்செல் மார்ஷ் காலை உலகக்கோப்பை மீது வைத்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவத் துவங்கியது. பலர் அவரை வசைபாடி, விமர்சனம் செய்த நிலையில், சிலர் உலகக்கோப்பை மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதையால் வருத்தத்தில் ஆழ்ந்தனர். தற்போது முகமது ஷமியிடம் அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது அவரும் தான் மனமுடைந்து போய் இருப்பதாக தெரிவித்தார்.
தலையில் தூக்கி வைக்க வேண்டிய உலகக்கோப்பையை காலில் போட்டு மிதிப்பது கடும் வருத்தத்தை அளிக்கிறது, அந்த உலகக்கோப்பையை வெல்லத் தான் எல்லா அணிகளும் முயன்று வருகின்றன என ஷமி கூறி இருக்கிறார்.
முகமது ஷமி பேசுகையில், "நான் காயமடைந்து இருக்கிறேன். உலகில் இருக்கும் அனைத்து அணிகளும் அந்த கோப்பையை வெல்லத் தான் போராடுகிறார்கள். தலை மீது ஏந்த வேண்டும் என நினைக்கும் கோப்பை அது. அந்த கோப்பை மீது காலை வைப்பது என்பது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது" என கூறி இருக்கிறார்.
மிட்செல் மார்ஷின் தந்தை ஜெஃப் மார்ஷ் 1987 உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றவர். தந்தை - மகன் உலகக்கோப்பை வென்றது இதுவே முதல்முறை. இப்படி உலகக்கோப்பை மீது குடும்பத்திலும் ஒரு பாரம்பரியம் இருக்கும் நிலையில் அதை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார் மிட்செல் மார்ஷ். அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications