அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட்டுடன், முகமது சிராஜ் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு விஷயத்திற்காக முகமது சிராஜுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி விட்டு, முகமது சிராஜ் கொண்டாடிய போது சர்ச்சை எழுந்தது.

ட்ராவிஸ் ஹெட், சிராஜை திட்டினார். பதிலுக்கு சிராஜ் அவரை பார்த்து சில வார்த்தைகளை சொன்னார். இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மட்டும் இல்லாமல் முகமது சிராஜ் வேறு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் செய்தார்.
இந்தப் போட்டியில் அவர் வீசிய பந்து பேட்ஸ்மேன் உடைய காலில்பட்ட போதெல்லாம் அம்பயரிடம் முறையாக "எல்பி டபிள் யூ" அவுட் கேட்காமல், அதை விக்கெட் ஆகவே கொண்டாடினார். பொதுவாக "எல் பி டபிள்யூ" அவுட் என சந்தேகம் எழுந்தால் பந்து வீச்சாளர்கள் அம்பயரை பார்த்து அவுட் கேட்பார்கள். விதிமுறைகளிலும் அப்படி தான் கேட்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், முகமது சிராஜ் அம்பயரிடம் அவுட் கேட்காமல், தான் விக்கெட் வீழ்த்தியதை போலவே அதை கொண்டாடினார். ஒருமுறை, இருமுறை என்று இல்லாமல் பலமுறை அதே போல நடந்து கொண்டார். அது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அவர் செய்வது சரியல்ல என்று விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரீ முகமது சிராஜூக்கு அம்பயரை அவமதித்த குற்றத்திற்கான தண்டனையை வழங்கி இருக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "சிராஜ் அம்பயரிடம் "எல் பி டபிள்யூ" அவுட் கேட்காமல் அதை கொண்டாடியதற்காக அபராதம் விதிக்க வேண்டும். அவர் பேட்ஸ்மேன் காலில் பந்து பட்டவுடன் அவர்கள் அவுட் ஆகிவிட்டது போல ஓடினார்." என்றார்,
மேலும், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு அபராதம் விதிக்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் விளையாடிய போது இது போன்ற விஷயங்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும். இதில் மோசமாக சிக்கியவர் பிரெட் லீ. "நீ அம்பய்ரிடம் திரும்பி நின்று அவுட் கேட்கவில்லை என்றால் அபராதத்தை சந்திக்க வேண்டும்." என்று பிரெட் லீ-இடம் பலமுறை அம்பயர்கள் சொல்லி இருக்கிறார்கள்." என்றார் மைக்கேல் கிளார்க்.