அடிலெய்டு: தனது அறிமுக டெஸ்ட் தொடரில், தான் ஆடிய முதல் 4 இன்னிங்ஸ்களில் மூன்று முறை இந்திய அணியிலேயே அதிக ஸ்கோர் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணியிலேயே அதிக பேட்டிங் சராசரியுடன் இருக்கும் பேட்ஸ்மேனும் இவர்தான்.
அனுபவ வீரர்களான விராட் கோலி, கே எல் ராகுல், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரை காட்டிலும் மூன்று முறை அணியிலேயே அதிக ஸ்கோர் அடித்த வீரராக நிதிஷ் குமார் இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு வகையில் இந்திய அணியின் நிலையை எண்ணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் நிதிஷ் குமார் ரெட்டி அதிக அளவில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கவில்லை. அவர் 2024 ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி இருந்தார். அவர் வேகப்பந்து வீச்சு ஆல் - ரவுண்டர் என்ற ஒரே காரணத்துக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
அவரை சேர்த்தது சரியான முடிவா? என்ற விமர்சனம் அப்போது இருந்தது. ஆனால் அவர் இந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அப்போது இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆன நிலையில் நிதிஷ் குமார் அதில் 41 ரன்கள் அடித்திருந்தார். ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்து அவருக்கு அடுத்த இடத்தை தான் பிடித்திருந்தார்.
அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதம் அடித்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தும் வகையில் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அதில் நிதிஷ் குமார் 42 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை அவருக்கு அடுத்து கே எல் ராகுல் 37 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணியிலேயே மீண்டும் அதிக ஸ்கோர் அடித்த வீரராக நிதிஷ் குமார் இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆன நிலையில் நிதிஷ் குமார் 47 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 30 ரன்களை தாண்டவில்லை. இப்படி மூன்று இன்னிங்ஸ்களில் இந்திய அணியில் அதிக ரன் சேர்த்த வீரராக நிதிஷ் குமார் ரெட்டி இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன் குவித்த வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். அவர் 185 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஆனால், அவர் 161 ரன்கள் எடுத்தது மட்டுமே சிறந்த செயல்பாடாகும். ஜெய்ஸ்வால் நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 46.25 ஆகும்.
ஆனால், நிதிஷ் குமார் நான்கு இன்னிங்ஸ்களிலும் சராசரியாக 40 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 54 ஆக உள்ளது. ராகுல் 147 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 123 ரன்கள் எடுத்தும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.
இதை அடுத்து நிதிஷ் குமாருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதே சமயம் ஆல் ரவுண்டராகவும், ஏழாம் வரிசையிலும் பேட்டிங் செய்யும் ஒருவர் அதிக ரன் எடுப்பதும், மற்ற முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பதும் இந்திய அணியின் பேட்டிங் கவலைக்குரிய நிலையில் இருப்பதை தான் சுட்டிக்காட்டுகிறது.