அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா மோதப் போகும் இறுதிப் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர் விராட் கோலி, முகமது ஷமி அல்ல வேறு ஒரு வீரர் தான் என அடித்துக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிலும் போட்டியை மாற்றக் கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் யார் என்ற விவாதம் தொலைக்காட்சி ஒன்றில் நடந்தது. அப்போது பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் போட்டியை மாற்றக் கூடிய வீரர் என கூறி இருக்கிறார்.
அதற்கு அவர் கூறிய முக்கிய காரணம், மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் என இருவருமே இந்த உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி உள்ளனர். மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தாமல் போனாலும் கூட அவர் ஓவரில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களின் ஓவர்களில் ரன் குவிப்பார் என உறுதியாக கூறி இருக்கிறார் கம்பீர். அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் சதம் அடித்ததை சுட்டிக் காட்டி அவர் இப்படி கூறி இருக்கிறார்.
இது பற்றி கவுதம் கம்பீர் கூறுகையில், "இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிகப் பெரிய கேம் சேஞ்சர். அவர் அணியில் தன் இடத்துக்காக போராடி, இடம் பெற்றார். அதன் பின் அரை இறுதியில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் பந்து வீசும் போது, ஸ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமானவராக இருப்பார்" என தெரிவித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் ஆறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத போதும், கடைசி மூன்று லீக் போட்டிகளில் 82, 77, 128* ரன்கள் குவித்தார். அரை இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 70 பந்துகளில் சதம் அடித்து 105 ரன்கள் குவித்தார். மொத்தம் 10 உலகக்கோப்பை போட்டிகளில் 526 ரன் குவித்து இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.