ஆஸ்திரேலியா என்பது அஸ்திராலயம்.. உலகக்கோப்பை வென்ற ரகசியமே அதுதான்.. இணையத்தை கதிகலங்க வைத்த தகவல்
மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், அதற்கு காரணமே ஆஸ்திரேலியாவின் பெருமை தான் எனக் கூறி ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவையும் இந்தியாவின் கலாச்சாரத்தோடு முடிச்சுப் போட்டு பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டவர்கள் ஆண்ட பூமி தான் ஆஸ்திரேலியா என கூறி வருகின்றனர்.

அதாவது ஒரு காலத்தில் பாண்டவர்கள் மொத்த பூமியையும் ஆண்டதாகவும், அதில் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் தற்போதைய ஆஸ்திரேலிய கண்டத்தை ஆண்டதாகவும் கூறுகின்றனர். அப்போது அங்கே அஸ்திரங்களை சேகரித்து வைக்கும் இடமாக ஆஸ்திரேலியாவை பயன்படுத்தியதாகவும், அதனாலேயே அந்த இடத்திற்கு "அஸ்திராலயா" (அஸ்திரங்களின் கிடங்கு) என பெயர் வந்ததாகவும், பின்னர் அந்தப் பெயரே மருவி ஆஸ்திரேலியா என மாறி விட்டதாகவும் கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி அஸ்திரங்கள் என்றால் அணு ஆயதங்களையும் சேர்த்து தான் குறிக்கும் எனவும், அதை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தியதாலேயே மத்திய ஆஸ்திரேலியா தற்போது பெரும் பாலைவனமாக இருப்பதாக கூறுகின்றனர். அதாவது அணு ஆயுதம் கொண்டு மத்திய ஆஸ்திரேலியாவில் நடந்த போர் அல்லது ஆணு ஆயுத வெடிப்பின் காரணமாக மத்திய ஆஸ்திரேலியா தற்போது பாலைவனமாக இருப்பதாக கூறி உள்ளனர்.
இப்படி ஆஸ்திரேலியா அஸ்திரங்களின் கூடாரமாக இருப்பதால், அந்த அணி உலகக்கோப்பை வென்றதில் ஆச்சரியம் இல்லை என இந்த கருத்துக்களை பரப்பி வருபவர்கள் கூறுகின்றனர். இதற்கு சான்றாக ஆன்மீக சொற்பொழிவாளர்களின் எப்போது, ஆஸ்திரேலியா என்பது "அஸ்திராலயா" எனக் கூறிய வீடியோக்களையும் சேர்த்து பரப்பி வருகின்றனர். இது போன்ற தகவல்களில் உண்மை இல்லை என்றாலும் பலரும் இதை உண்மை என நம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications