கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆறு பந்துகள் இடைவெளியில் 4 விக்கெட்களை வீழ்த்தி மிரள வைத்தார். ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.
ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ள இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

அதற்காக ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் ஒரு பகல் - இரவு பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் டெஸ்ட் போட்டியாக இல்லாமல், 46 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணி துவக்கத்தில் 2 விக்கெட்களை இழந்த போதும் அதன் பின் அதிரடியாக ரன் சேர்த்து வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் சதம் அடித்து அசத்தினார். அவர் 97 பந்துகளில் 107 ரன்கள் அடித்து இருந்தார்.
அதன் பின் நான்காம் வரிசை வீரர் ஜாக் கிளேடன் 40 ரன்களும், பின்வரிசை வீரர் ஹானோ ஜேக்கப்ஸ் 61 ரன்களும் எடுத்து இருந்தனர். இடையே விக்கெட்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் ஹர்ஷித் ராணா மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். வரிசையாக நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்தார்.
23 வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து 25 வது ஓவர வீசிய அவர் அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஆறு பந்துகள் இடைவெளியில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதை அடுத்து ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹர்ஷித் ராணா 4 விக்கெட்களும், ஆகாஷ்தீப் 2 விக்கெட்களும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.