கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியில் இடம் பெற்று இருந்த இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சதம் அடித்தார். துவக்க வீரரான அவர் 97 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். மழையின் காரணமாக 46 ஓவர் போட்டியாக நடைபெற்ற இந்த பயிற்சிப் போட்டியில் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடி ஆட்டம் இருந்தார்.
ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சாம் கோன்ஸ்டாஸ் சதம் அடித்து ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலியாவின் துவக்க வீரராகும் வாய்ப்பு முன்பு இருந்தது.

ஆனால், 19 வயதே ஆகும் அவருக்கு அதிக அழுத்தம் நிறைந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகும் வாய்ப்பை அளித்தால் அவரது கிரிக்கெட் கேரியர் பாதிக்கப்படலாம் என அவரது மாநில அணியின் பயிற்சியாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அவர் இன்னும் தனது பேட்டிங்கை மெருகேற்ற வேண்டும். அதற்குள் அவருக்கு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு அளித்தால் அதை எதிரணிகள் பயன்படுத்தி அவரது தன்னம்பிக்கையை குலைத்து விடக் கூடும் என அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
எனவே, சாம் கோன்ஸ்டாஸ் நல்ல ஃபார்மில் இருந்த போதும் அவருக்கு இந்திய அணிக்கு எதிராக ஆடும் வாய்ப்பை ஆஸ்திரேலிய தேர்வு குழுவினர் அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக நாதன் மெக்ஸ்வீனி என்ற வீரருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சாம் கோன்ஸ்டாஸ் சதம் அடித்து இருப்பது ஆஸ்திரேலிய அணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று கேள்வியை எழுப்பி உள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அத்தனை எளிதில் அணி மாற்றத்தை செய்யாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் முன்பே சுட்டிக் காட்டி இருந்தனர். எனவே, சாம் கோன்ஸ்டாஸ் இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை.
எனினும், துவக்க வீரர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் நிச்சயம் சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.