பெங்களூர் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குடன், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடியை பெயர் குறிப்பிடாமல் ஒப்பிட்டு கிண்டல் அடித்து வம்பிழுத்துள்ளது ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த ஐந்தாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.
அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசிய போது முதல் மூன்று பந்துகளை சந்தித்தவர் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட். அவர் அந்த மூன்று பந்துகளிலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து முடியாமல் அவுட் ஆனார்.

ஆனால், 2022இல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19வது ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் இதே மேத்யூ வேட் பேட்டிங் செய்தார். அப்போது 19வது ஓவரை பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார்.
அந்த ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார் மேத்யூ வேட். அப்போது முதல் ஷஹீன் ஷா அப்ரிடி கடைசி ஓவர்களை சரியாக வீசாமல் போனால் இதை வைத்தே கிண்டல் செய்யப்படும்.
ஷஹீன் ஷா அப்ரிடி இடது கை வேகப் பந்துவீச்சாளர். அதே போல அர்ஷ்தீப் சிங்கும் இடது கை வேகப் பந்துவீச்சாளர். இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 20வது ஓவரில் ரன் கொடுக்காமல் வேட் விக்கெட்டை வீழ்த்தியதை குறிப்பிட்டு, "மேத்யூ வேட் இந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரிடம் உங்கள் ஆட்டம் பலிக்காது?" என பஞ்சாப் கிங்ஸ் அணி ட்வீட் பதிவிட்டு இருந்தது.
அது மறைமுகமாக ஷஹீன் ஷா அப்ரிடியைத் தான் குறிக்கிறது என ரசிகர்கள் கிண்டல் செய்யத் துவங்கி உள்ளனர். இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ஷஹீன் ஷா ஓவரில் அடித்த அந்த மூன்று சிக்ஸர்கள் இன்னும் அவரை கிண்டலுக்கு உள்ளாக்கி வருகிறது.