மும்பை : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிற உயர் அதிகாரிகள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த டிராவிட் இந்திய அணியின் ஸ்பின்னர்களை நம்பி திட்டம் வகுத்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார். சுற்றி வளைத்து இந்திய அணியின் தோல்விக்கு குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என கூறி இருக்கிறார் டிராவிட்.

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக ஆடியது. லீக் சுற்றில் தான் ஆடிய ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்றது இந்திய அணி. அடுத்து அரை இறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்தப் போட்டி நடந்த பிட்ச் மந்தமாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலியா சேஸிங் செய்த போது பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. ஆஸ்திரேலியா எளிதாக சேஸிங் செய்து வெற்றியும் பெற்றது.
உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்த நிலையில், தற்போது அது குறித்து பிசிசிஐ பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. அப்போது ராகுல் டிராவிட் என்ன விளக்கம் அளித்தார் என "தைனிக் ஜாக்ரான்" என்ற ஹிந்தி பத்திரிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இறுதிப் போட்டியில் பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், பந்து சுத்தமாக திரும்பவில்லை. அதனால், எங்கள் ஸ்பின்னர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஒருவேளை பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தபடி இருந்திருந்தால் அவர்கள் விக்கெட் வீழ்த்தி இருப்பார்கள் என ராகுல் டிராவிட் விளக்கம் அளித்ததாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நாங்கள் இதே திட்டத்தை வைத்து தான் பத்து போட்டிகளில் வெற்றி பெற்றோம். இந்த திட்டம் மட்டும் சரியாக நடந்திருந்தால் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கும் என டிராவிட் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் ஆடிய ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதுதான் காரணம் என அவர்களை சிக்க வைத்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.