ராய்ப்பூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது போட்டியில் இந்திய அணியின் அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் வெறும் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலமாக இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்பின்னர்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளார்கள். ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்த போது, ரவி பிஷ்னாய் மற்றும் அக்சர் படேல் இருவரும் அடுத்தடுத்து அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி ரவி பிஷ்னாய் ஆஸ்திரேலியா அணியை அழுத்தத்திற்கு தள்ளினார்.
தொடர்ந்து அக்சர் படேல் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த, அதன்பின் இரு ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். பவுண்டரிகளை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒரு ரன் எடுக்கவே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டார்கள். இவர்கள் இருவரும் மொத்தமாக 8 ஓவர்கள் வீசிய 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதேபோல் இருவருமே தலா 4 ஓவர்களை வீசிய நிலையில், இரு பவுலர்களுமே மொத்தமாக இணைந்து 26 டாட் பால்களை வீசியுள்ளனர். இதுதான் ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட்டை குறைத்ததோடு, வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் அதிகரிக்க செய்தது. இதனால் 2 ஸ்பின்னர்களுக்கும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.