பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்கு செல்லும் போது நீண்ட நெடிய தொடரில் விளையாட நேரிட்டால் தங்களது குடும்பத்தினரையும் அழைத்து வரலாம் என்ற விதியை பிசிசிஐ காலம் காலமாக வைத்திருக்கிறது. குடும்பத்தை விட்டு வீரர்கள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை பிசிசிஐ செய்து வருகிறது.
இதனால் பல கிரிக்கெட் வீரர்களின் மனைவியும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பார்கள். தற்போது கூட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அவருடன் பங்கேற்று இருக்கிறார்.

இந்த நிலையில் 2014-2015 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஒரு வினோத சம்பவம் நடைபெற்றதாக ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி அப்போது செயல்பட்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது தான் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு விராட் கோலி கேப்டனாக மாறினார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் போது மனைவிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஏன் தோழிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை? என்னுடைய கேர்ள் பிரண்டை நான் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரலாமா என்று விராட் கோலி தம்மிடம் கேட்டதாக ரவி சாஸ்திரி கூறினார்.
கோலி அப்போது திருமணம் செய்யவில்லை. இந்த நிலையில் கோலியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்கவில்லை. இதை அடுத்து தாம் தான் அனுஷ்கா சர்மாவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர ஒப்புதல் அளித்தேன். இதனை அடுத்து அனுஷ்கா ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியுடன் இணைந்தார்.
அனுஷ்கா சர்மா வந்தவுடன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 169 ரன்கள் குவித்தார். இருவரும் அப்போதே காதலித்து தான் வந்தனர். அனுஷ்கா சர்மா அருகில் இருக்கும் போது விராட் கோலி இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தற்போது பத்து ஆண்டுகள் கழித்தும் இரண்டு குழந்தைகள் பெற்றும் கோலி சதம் அடித்து அனுஷ்கா சர்மாவுக்கு காற்றில் முத்தமிட்ட சம்பவம் ரசிகர்களை நிகழ்ச்சி அடைய செய்திருக்கிறது.