IND vs AUS: அஸ்வினை ஓரங்கட்டிய ரோஹித்.. பெரிய தப்பு பண்றீங்க.. ஹர்பஜன் சிங் விளாசல்
அடிலெய்டு: இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறையாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாதது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. முன்னாள் வீரரும், இந்திய அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங் இது பற்றி கடும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 180 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் ஆடத் தொடங்கியது. இந்த மைதானத்தில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார்.

பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் மாற்றி, மாற்றி பந்து வீசினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கப்பட்டது. இந்திய அணி முதல் நாள் அன்று 33 ஓவர்கள் வீசிய நிலையில் அதில் அஸ்வின் ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்தார். லாபுஷேன் மற்றும் மெக்சஸ்வீனி இணைந்து ரன் குவித்து வந்த நிலையில் இந்திய அணியால் அவர்களை பிரிக்க முடியாத நிலை இருந்தது. ஆனாலும், அஸ்வினுக்கு அப்போது ஓவர் அளிக்கப்படவில்லை.
அஸ்வினை இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய காரணமே, இதற்கு முன் அவர் அடிலெய்டு மைதானத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியது தான். இந்த மைதானத்தில் அஸ்வின் இதுவரை மூன்று போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்திய காரணத்திற்காக அணியில் எடுத்து விட்டு அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்காதது குறித்து விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் இது பற்றி பேசுகையில், "அஸ்வின் சில ஓவர்களாகவது வீசி இருக்க வேண்டும். அவருக்கு முழு ஸ்பெல் வீச வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று - நான்கு ஓவர்களாவது அவர் வீசி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்." என்றார்,
மேலும், "ரோஹித் சர்மா அவருக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக மார்னஸ் லாபுஷேன் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி பேட்டிங் செய்தபோது அஸ்வின் அவர்களுக்கு பந்து வீசி இருக்க வேண்டும். அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பதால் அவர் இரண்டாவது நாளில் அதிக ஓவர்களை வீச வேண்டும்." என்றார் ஹர்பஜன் சிங்.
இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதலில் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஸ்வின் 48வது ஓவரைத் தான் வீசினார். மொத்தம் 48 ஓவர்களில் அஸ்வின் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தார். அதன் பின்னரே அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications