பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா அணியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அபாரமாக பேட்டிங் செய்தார். அதன் மூலம் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க முக்கிய காரணமாக இருந்தார்.
ஜடேஜாவை முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. ஆனால், அவரது பேட்டிங் சராசரி ஆஸ்திரேலியாவில் 50-க்கும் மேல் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த இன்னிங்ஸிலும் அவர் அரை சதம் அடித்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி மோசமாக பேட்டிங்கை துவக்கியது. இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் மட்டுமே சிறப்பாக ஆடி 84 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்த நிலையில் ஏழாம் வரிசையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா அபாரமாக ஆடி 123 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்திய அணி 200 ரன்களை கடந்தது. ரவீந்திர ஜடேஜாவின் குறிப்பிட்ட புள்ளி விவரம் ஒன்று மிகப்பெரும் சாதனையாக சுட்டிக் காட்டப்படுகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வைத்து இருப்பதாக முன்பு சொல்லப்பட்டு வந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு அதை விட அபாரமாக உள்ளது. எனினும். ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
அந்த ஐந்து போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து இருக்கும் அவர் 252 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஒரு முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 50.40 ஆக உள்ளது. இது அசாத்தியமான பேட்டிங் சராசரியாகும். ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரர்கள் ரன் குவிப்பது சற்று கடினம் தான்.
அதிலும் ஆசிய அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ரன் குவிப்பது என்பது சவாலான விஷயம். எனினும், ரவீந்திர ஜடேஜா பகுதி நேர பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவில் 6 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் எடுத்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மூன்று அரை சதம் அடித்து இருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் மாறி, மாறி வாய்ப்பு பெற்றனர். அவர்கள் இருவரும் பேட்டிங்கில் பெரிதாக கை கொடுக்காத நிலையில் மூன்றாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் 77 ரன்கள் சேர்த்தார்