மும்பை :இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கிறார் ரிங்கு சிங். 26 வயதான அவர் கடந்த ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் 474 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய சராசரி 59.25 ஆகும்.இதேபோன்று அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 149.53 என்ற அளவில் இருந்தது.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர் பல கடினமான போட்டிகளில் அபாரமாக ரன் குவித்தது என்று பல சாதனைகளைப் படைத்த ரிங்கு சிங், தற்போது இரண்டு முறை 20வது ஓவரில் 20 ரன்களுக்கு மேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

ரிங்கு சிங் தற்போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நம்பர் ஆறாவது இடத்தில் களமிறங்க தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ரிங்கு சிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நான் ரிங்கு சிங் இன் தன்னம்பிக்கையை மிகவும் விரும்புகிறேன். அவர் எந்த அணிக்கு விளையாடினாலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்காக வெற்றியைத் தேடித் தருகிறார்.
அது சாதாரண கிளப் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி இந்திய அணிக்கு விளையாட வேண்டியதாக இருந்தாலும் சரி. ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி எல்லாம் அவர் கண்டு கொள்வதே இல்லை. சில வீரர்கள் இவ்வளவு சாதனை செய்தால் அப்படியே புகழில் மிதப்பார்கள்.ஆனால் ரிங்கு சிங் அப்படி இல்லை. அவர் இதயத்தில் இருந்து பேசுகிறார்.
என்னை பொறுத்தவரை ரிங்கு சிங், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி போல் செயல்படுகிறார் என்று ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று இன்னிங்ஸில் விளையாடிய ரிங்கு சிங் சராசரியாக 99 என்ற அளவில் வைத்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 190.38 என்ற அளவில் அபாயகரமாக இருக்கிறது. இதனால் ரிங்கு சிங் வரும் டி20 உலக கோப்பையில் நிச்சயம் ஃபினிஷராக இடம் பெறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.