பிரிஸ்பேன்: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் திட்டிய சம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகாஷ் தீப் ஒரு ரிவ்யூவை வீணடித்து விட்டதாக ரிஷப் பண்ட் அவரை சாடினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது.

அதன் பின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து அபாரமாக ரன் சேர்த்தனர். அவர்கள் இருவரும் ஆடி வந்த நிலையில் 50 வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்து ஸ்டீவன் ஸ்மித்தின் கால்களில் பட்டது. ஆகாஷ் தீப் அம்பயரிடம் "எல் பி டபிள்யூ" அவுட் கேட்டார்.
அப்போது அம்பயர் அவுட் தர மறுத்துவிட்டார். இதை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவை அணுகிய ஆகாஷ் தீப் ரிவ்யூ செய்யலாம் என்றார். ரோஹித் சர்மா யோசிக்காமல் ரிவ்யூ கேட்டார். ஆனால் பந்து லெக் திசையில் சென்றது. ரீப்ளேவில் பார்த்தபோது பந்து ஸ்டம்ப்பில் படவில்லை.
இதை அடுத்து அந்த ரிவ்யூ வீணாகிப் போனது. இதை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆகாஷ் தீப்பை சாடினார். லெக் திசையில் செல்லும் பந்துக்கு ரிவ்யூ கேட்கலாமா? என அவரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். ட்ராவிஸ் ஹெட் 152 ரன்கள் குவித்தார். இருவரும் அபாரமாக ரன் குவித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.