பெங்களூர் : வருங்கால கேப்டன் என இப்போதே பரபரப்பாக பேசப்படும் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 26 வயதிலேயே விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக அபாரமாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலி மற்றும் மார்டின் கப்தில்-இன் சாதனைகளை உடைத்து வரலாறு படைத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டு தொடரிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்றார் பெருமையை பெற்றார்.

ஐந்து போட்டிகளில் ஆடி ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்து இருந்த ருதுராஜ் மொத்தம் 223 ரன்கள் குவித்தார். இதன் மூலம், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 218 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டி20 தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் விராட் கோலி இருக்கிறார். அவர் ஒரே டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 199 ரன்கள் குவித்து இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
223 - ருதுராஜ் கெய்க்வாட்
218 - மார்ட்டின் கப்டில்
199 - விராட் கோலி
192 - டெவோன் கான்வே
இது மட்டுமின்றி ஒரே இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் விராட் கோலி 231 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து டி20 தொடரில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். கே எல் ராகுல் நியூசிலாந்து தொடரில் 224 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார். ருதுராஜ் 223 ரன்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இன்னும் 9 ரன்கள் அடித்து இருந்தால் அவர் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்க முடியும்.
இருதரப்பு டி20 தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
231 - விராட் கோலி - இங்கிலாந்து தொடர்
224 - கே எல் ராகுல் - நியூசிலாந்து தொடர்
223 - ருதுராஜ் கெய்க்வாட் - ஆஸ்திரேலியா தொடர்
206 - இஷான் கிஷன் - தென்னாப்பிரிக்கா தொடர்
204 - ஷ்ரேயாஸ் ஐயர் - இலங்கை தொடர்