மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் சூழலில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருப்பார்களா என்று பேச்சு தேவையில்லாதது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளிலேயே விளையாடவில்லை.
அதற்கு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மீது கவனம் இருந்தது காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்பட்டது. தற்போது உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தும் இரு அனுபவ வீரர்களும் டி20 அணிக்கு திரும்பாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டி20 அணியில் இருந்து விராட் கோலி ஓரம்கட்டப்பட உள்ளதாகவும், ரோகித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இரு வீரர்களின் நிலை குறித்து தேர்வு குழுவும் எந்த விளக்கத்தையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், என்னை பொறுத்தவரை விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து எந்த கதைகளையோ, கணிப்புகளையோ பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாளை என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்திய அணி ஐசிசி தொடரை வென்று 10 ஆண்டுகளை கடந்துவிட்டது. அதனால் இந்திய அணியின் அணுகுமுறையை எவ்வளவு எளிமையாக மாற்ற முடியும் அப்படி மாற்ற வேண்டும்.
அதேபோல் ஐசிசி தொடரின் இறுதி கட்டத்தில் நாம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறோம். சரியாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்புகிறோம். அதில் வெல்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அதேபோல் டி20 உலகக்கோப்பை நெருங்கும் போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இரு வீரர்களின் பேட்டிங் ஃபார்மை கணக்கில் கொண்டு தேர்வு குழு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.