Ind vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி!!
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோலி ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சு கொஞ்சம் தடுமாறி வந்தது. விக்கெட் எடுக்க இந்தியா திணறிய போது, ஸ்லிப்பில் இருந்த கோலி அட்டகாசமான கேட்ச் பிடித்து இந்திய அணியை உத்வேகம் பெறச் செய்தார்.

இஷாந்த் சர்மா வீசிய பந்து
இஷாந்த் சர்மா வீசிய 55வது ஓவரின் முதல் பந்தை பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் எதிர் கொண்டார். இஷாந்த் வீசிய பந்து அவுட்சைடு - ஆஃப் திசையில் லேசாக பவுன்ஸ் ஆகி சென்றது. இதை கட் ஷாட் அடிக்க முயன்றார் ஹான்ட்ஸ்கோம்ப். ஆனால், பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் மேலே சென்றது.
ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கோலி
கோலிக்கு வலது கைப் பக்கம் பந்து சென்றது, கோலி ஒற்றை கையை கொண்டு எகிறி குதித்து கேட்ச் பிடித்தார். இப்படி கேட்ச் பிடிப்பது மிக மிக கடினம். இணையத்தில் வெளியான இந்த வீடியோவுக்கு இப்போதே ரசிகர்கள் லைக் மற்றும் ஆச்சரிய பதில்களை அளித்து வருகின்றனர்.

இந்திய அணி பந்துவீச்சு
இந்தியா பெர்த் ஆடுகளம் வேகத்துக்கு ஒத்துழைக்கும் என முடிவு செய்து நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கியது. ஆனால், முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா 112 ரன்கள் சேர்த்து அசத்தியது. பகுதி நேரமாக பந்து வீசிய ஹனுமா விஹாரி 2 விக்கெட்கள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
ஆஸ்திரேலியா நிதான ஆட்டம் ஆடி முதல் நாள் முடிவில் 277 ரன்கள் எடுத்துள்ளது. கையில் நான்கு விக்கெட்கள் மீதமுள்ளன. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 300 முதல் 350 ரன்கள் வரை ஆஸ்திரேலியா எடுக்கக் கூடும். பெர்த் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கிறது என தெரிய வந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் அந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் தான்.


Click it and Unblock the Notifications