மும்பை : இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பேராசைப்பட்டு செய்த தவறை சுட்டிக் காட்டி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
ரோஹித் சர்மா ஒரே ஓவரில் அதிக பவுண்டரிகளை அடித்து ஆட ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அது அவரது பேராசை என சூசகமாக கூறி இருக்கும் கவாஸ்கர், அவரது விக்கெட் மேக்ஸ்வெல் ஓவரில் போனதால் நடந்த பின் விளைவுகளையும் அதனால் இந்திய அணி எப்படி சரிந்தது என்பது பற்றியும் விளக்கி இருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். கிளென் மேக்ஸ்வெல் வீசிய பத்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அத்துடன் நிறுத்தாமல் அடுத்து ஒரு சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார் ரோஹித். ஆனால், அந்த பந்து கேட்ச் ஆனது.
அதனால், ரோஹித் சர்மா 9.4 ஓவரில் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் நான்கு ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் பின் எழுந்திருக்கவே இல்லை. விராட் கோலி, கே எல் ராகுல் இணைந்து பவுண்டரியே அடிக்காமல் ஆமை வேக ஆட்டம் ஆடினர்.
மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ட்ராவிஸ் ஹெட் போன்ற பகுதி நேர பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் அவர்கள் ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை. அதற்கு காரணம், ரோஹித் சர்மா மேக்ஸ்வெல் ஓவரில் ஆட்டமிழந்தது தான். கேப்டன் போல, நாமும் ஆஸ்திரேலியாவின் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ஓவரில் அவுட் ஆகி விடுவோம் என நினைத்து கோலி, ராகுல் எல்லா ஓவர்களிலும் நிதான ஆட்டம் ஆடினார்கள் எனக் கூறி இருக்கிறார் கவாஸ்கர்.
இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், "10வது ஓவரில் பவர்பிளே முடியும் முன் ரன் குவிக்க நினைத்த ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து இருந்தார். ஆனால், அவர் அப்போது அவுட் ஆனார். ரோஹித் இந்த விஷயத்தில் மிகவும் பேராசைப் பட்டாரா? சுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில் அவர் தன்னை இன்னும் கட்டுப்படுத்தி ஆடி இருக்க வேண்டாமா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
"ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பவுலர் ஒரு லாட்டரி போல அமைந்து வந்தது. இந்திய அணி கேப்டனின் விக்கெட்டை மேக்ஸ்வெல் வீழ்த்தினார். அதனால், பகுதி நேர பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் கவனமாக ஆடத் துவங்கினார்கள். அதனால், இந்தியா குறைந்தது 30 ரன்களை இழந்தது. அந்த 30 ரன்கள் கிடைத்து இருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்குமா? என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று" என்றார் சுனில் கவாஸ்கர்.