
நடராஜன் நிலை
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் டி நடராஜன் படிப்படியாக முன்னேறி ஐபிஎல் அணிகளில் கடந்த சில ஆண்டுகளாக இடம் பெற்று இருந்தார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டார்.

ஐபிஎல் திறமை
ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர் பந்துவீச்சால் அனைவரையும் மிரள வைத்தார். அவர் பந்துகளை சந்திக்க சர்வதேச வீரர்களே திணறினர். இந்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

தேடி வந்த வாய்ப்பு
பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு அவருக்கு முதலில் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள மூன்று இந்திய அணிகளில் எதிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக அணியில் கூடுதல் பந்துவீச்சாளராக பயிற்சியின் போது மட்டும் பந்துவீசும் வாய்ப்பை பெற்றார்.

அணியிலும் இடம்
அதன் பின் டி20 அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்ட பின் டி நடராஜன் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அதன் மூலம், போட்டிகளில் கூட அவர் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முடிவு செய்தால் மட்டுமே அது நடக்கும்.

ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள்
நடராஜனையும் சேர்த்து ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், நடராஜன் என ஐந்து பேர் உள்ளனர் இவர்களில் மூவருக்கு மட்டுமே ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும்.
We have seen him bowl with a lot of success in the @IPL and here is @Natarajan_91 bowling in the #TeamIndia nets for the first time after his maiden India call-up! A dream come true moment. 👏 pic.twitter.com/WqrPI0Ab7I
— BCCI (@BCCI) November 15, 2020
அந்த வீடியோ
அனுபவ வீரர்களை தாண்டி நடராஜன் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவது கடினம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் தான் நடராஜன் இந்திய வீரர்களுடன் வலைப் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன் அவர் பந்து வீசினார்.

யார்க்கர்
வலைப் பயிற்சியிலும் தன் முக்கிய திறமையான யார்க்கரை பயன்படுத்தினார். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் ஆறு யார்க்கர் வீசி அவர் மிரள வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைக்குமா?
பயிற்சியில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நடராஜனின் பந்துவீச்சை உற்று நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், டி20 போட்டிகளில் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளித்து, நடராஜன் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

கனவு நனவானது
அணியில் இடம் பெறுவது என்பதைத் தாண்டி இந்திய அணியுடன் பயிற்சி செய்து தன் கனவில் பாதியை நனவாக்கிக் கொண்டுள்ளார் நடராஜன். வலைப் பயிற்சியில் வார்னரை ஈர்த்து ஹைதராபாத் அணியில் இடம் பெற்றது போலவே, விராட் கோலியை ஈர்த்து இந்திய அணியிலும் அவர் இடம் பெறுவாரா?


Click it and Unblock the Notifications











