பெங்களூரு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றாலும் வெற்றியுடன் தொடரை முடிக்கும் உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐந்தாவது டி20 போட்டி ரன் குவிப்புக்கு சாதகமான பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதால் இன்றைய ஆட்டத்தில் மீண்டும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் அடித்தால் மிகப்பெரிய சாதனை ஒன்று படைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெறுவார். தற்போது டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 231 ரன்களுடன் உள்ளார்.
கே.எல் ராகுல் 224 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், ருதுராஜ் 213 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் 87 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டியில் ஒரு தொடரில் 300 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் தொடக்க வீரராக தன்னுடைய இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் உறுதி செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு காரணம் கில் அணிக்கு வந்தால் ருதுராஜ் இடம் பறிபோக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சாதனையை ருதுராஜ் செய்தால் அவரை அணியிலிருந்து நீக்குவது மிகவும் கடினமாக மாறிவிடும். இதனால் டி20 போட்டியில் தன்னுடைய இடத்தை ருதுராஜ் உறுதி செய்ய அவருக்கு நல்ல வாய்ப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தொடரில் ருதுராஜ் மூன்று வகை கிரிக்கெட்டிலுமே இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.