மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ஜெயிக்க வேண்டிய இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஜோடி பரிசோதனை முயற்சி என பல மாற்றங்களை அணியில் செய்தார்கள். அதில் அவர்கள் மேற்கொண்ட முக்கிய மாற்றம் டி20 பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவை ஒரு நாள் போட்டிக்கு கொண்டு வந்ததுதான்.

அவர் ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்ததை வைத்து இவர்தான் நமது அணியின் பினிஷர் என்று ராகுல் டிராவிட்டும், ரோஹித் சர்மாவும் ஏமாந்து போனார்கள். மேலும் இதற்காகவே அணியில் உருவாக்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடம் தரவில்லை. மேலும் பரிசோதனை முயற்சி என்ற பெயரில் பல முடிவுகளை இந்திய அணி எடுத்ததும் கடைசியில் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் இன்னும் ஏழு மாதத்தில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. தற்போது இதற்கான அணியை தயாரிக்கும் பணியில் தேர்வு குழு ஈடுபட்டு வருகிறது .இதில் முதல் படியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது. இதிலும் பரிசோதனை முயற்சியாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் யாருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
டி20 போட்டிக்காக உருவாக்கப்பட்ட ஹர்சல் பட்டேல், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் தரப்படவில்லை. இதை போன்று சாகலுக்கும் டி20 அணியில் இடம் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதில் இளம் வீரர் ஜித்தேஷ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே நம்பிக்கை இன்றி காணப்படும் சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் என்ற பெரும் பாரத்தை தலையில் ஏற்றி அதிலும் ஒரு சோதனை முயற்சியை தேர்வு குழு எடுத்திருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் போதும் டா சாமி உங்களுடைய சோதனை முயற்சி என்று கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். சோதனை முயற்சி என்ற பெயரில் மியூசிக் சேர் போட்டியை நடத்தாமல் இந்த இடத்திற்கு இந்த வீரர் தான் என்பதை முன்கூட்டியே அறிந்து போதிய வாய்ப்பு வழங்கி அவர்களை பட்டை தீட்ட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.