அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் சீனியர் வீரரான அஸ்வின் மற்றும் படிக்கல் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கடந்த முறை அடிலெய்ட் மைதானத்தில் நடந்த பகிலிரவு டெஸ்டில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனால் இம்முறை இந்திய அணி சிறப்பாக செயல்பட முடிவு செய்திருக்கிறது. பிசிசிஐ பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டாததால், இந்திய அணி சொந்த மண்ணில் அதிகளவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இது இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான 2 நாட்கள் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. நாளை மறுநாள் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி கான்பெரா வந்துள்ளது. அதேபோல் இந்திய அணியுடன் கேப்டன் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் 2 மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு நன்றாக உதவி கிடைக்கும். அதேபோல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், ஸ்பின்னர்களின் பங்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்துள்ளது.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வர பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் 2018-19 மற்றும் 2021 என்று இரண்டு முறை அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடிய போது, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிகளவில் வீழ்த்தி இருக்கிறார். இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தேவ்தத் படிக்கலின் இடத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுலும், தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மாவும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இந்திய அணியின் தேவையாக பார்க்கப்படுகிறது. 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என்று கம்பீர் முடிவு செய்திருப்பதால், இந்திய அணியில் ஒரேயொரு ஸ்பின்னராக அஸ்வின் மட்டுமே இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் காயத்தில் இருந்து குணமடைந்த பின்னரே அவர் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.