அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். மீண்டும் 4வது ஸ்டம்ப் லைன் பந்தில் வீசப்பட்ட பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டு மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், இந்திய அணியின் விராட் கோலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் விராட் கோலி 5 சதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் பெர்த் டெஸ்டில் சதமடித்து விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி இருந்தார்.

ஆனால் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 337 ரன்களை விளாசியதால், இந்திய அணி வீரர்கள் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் 7 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்பின் சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்தது. விராட் கோலி களமிறங்கிய போல் தான் ஆஸ்திரேலியா அணியின் ஸ்காட் போலண்ட் அட்டாக்கில் வந்திருந்தார். இதனால் போலண்ட் பவுலிங்கில் இருந்து எப்படி விராட் கோலி தப்பிப்பார் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் எப்படி அட்டாக் செய்தாலும், போலண்ட் தனது லைன் மற்றும் லெந்தில் எந்த மாற்றத்தையும் செய்யாதவர்.
அதற்கேற்ப போலண்ட் விராட் கோலிக்கு தொடர்ச்சியாக 4வது ஸ்டம்ப் லைனிலேயே வீசிக் கொண்டிருந்தார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்களும் ஃபீல்டிங்கில் எச்சரிக்கையுடன் இருந்தனர். 14.3 ஓவரில் விராட் கோலிக்கு மீண்டும் 4வது ஸ்டம்ப் லைனில் வீசிய பந்திலேயே, விராட் கோலி அவுட்சைட் எட்ஜ் கொடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் விராட் கோலி 4வது ஸ்டம்ப் லைனில் வீசிய பந்துகளுக்கு மட்டும் எண்ணிலடங்கா முறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இதனை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்றிக் காட்டுவார் என்று பார்க்கப்பட்ட போது, மீண்டும் மீண்டும் திருந்தாமல் அதே லைன் மற்றும் லெந்தில் வீசிய பந்துக்கு விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் விராட் கோலி தனது ஈகோவை மாற்றிக் கொண்டு ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.