IND vs AUS: 123 பந்துகள்.. ஆஸ்திரேலியா மண்ணில் முதல் அரைசதம்.. 22 வயதில் கெத்து காட்டிய ஜெய்ஸ்வால்!
பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், 2வது இன்னிங்ஸில் 123 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக ஜெய்ஸ்வாலால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பும்ராவின் வேகத்தில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலமாக 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி தரப்பில் 22 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி மீண்டும் தொடக்கம் கொடுத்தது.
புதிய பந்தில் ஜெய்ஸ்வால் எப்படி தப்பிப்பார் என்று இந்திய ரசிகர்கள் பரபரப்புடன் இருந்தனர். ஆனால் மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் மூவரையும் மிக சாதாரணமாக ஜெய்ஸ்வால் எதிர்கொண்டார். ஒவ்வொரு பந்தையும் கடைசி வரை கவனித்து டிஃபென்ஸ் ஆடியது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ஏனென்றால் இந்திய மண்ணில் ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களை குவித்து பழக்கம் கொண்டவர்.
இவர் ஒவ்வொரு பந்தையும் கீப்பருக்கு லீவ் செய்தும், டிஃபென்ஸ் ஆடியும் களத்தில் உறுதியுடன் நின்றது பாராட்டுகளை பெற்றது. அதேபோல் சில மோசமான பந்துகளை பவுண்டரி அடித்ததோடு, சிங்கள் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதில் கவனமாக இருந்தனர். இதன் காரணமாக 2வது செஷனில் ஒரு விக்கெட்டை கூட இந்திய அணி பறிகொடுக்கவில்லை.
கேஎல் ராகுல் தனது அனுபவம் மூலமாக டிஃபென்ஸ் ஆடினாலும், ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே தரமான டிஃபென்ஸை ஆடி இருக்கிறார். சிறப்பாக ஆடிய அவர் 123 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ஜெய்ஸ்வால் அடித்த அரைசதங்களில், இந்த அரைசதத்திற்கு தான் அதிக பந்துகளை எடுத்து கொண்டுள்ளார்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 104 பந்துகளில் அரைசதம் அடித்ததே, அதிக பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதமாக இருந்தது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் 9வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக 22 வயதிலேயே ஆஸ்திரேலியா மண்ணிலும் ஜெய்ஸ்வால் தனது தடத்தை பதித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications