சிட்னி : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் மனைவி ஜெஸிக்கா, உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தன் கணவர் இல்லாமல் பிறந்தநாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்களுக்கு தனியாக செல்வது கடினமாக உள்ளதாக கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "சில சமயம் அவர் இல்லாதது எனக்கு கடினமாக இருக்கும். ட்ராவிஸ் பிறந்தநாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்களுக்கு வர மாட்டார். நானே தனியாக அங்கே செல்ல வேண்டி இருக்கும். இதுதான் கிரிக்கெட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு." என்றார்.
"அதே சமயம் ட்ராவிஸ் மிகவும் ஆதரவு அளிக்கும் துணை. அவர் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாலும் குடும்பத்திற்கு ஆதரவான விஷயங்களை அவர் செய்து விடுவார்" என்று தன் கணவர் டிராவிஸ் ஹெட் குறித்து தெரிவித்தார் ஜெஸிக்கா.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்திய அணியை வீழ்த்தியதால், சில ரசிகர்கள் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அவரது மனைவியின் சமூக ஊடக பக்கங்களில் அவர்களை வசை பாடி பதிவுகளை வெளியிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர்கள் பலர் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அவரது மனைவிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டனர்.
அது குறித்து பேசிய ஜெஸிக்கா, "99.99 சதவிகித மக்கள் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ட்ரோல்களுக்காக நான் என் ஆற்றலை வீணாக்க விரும்பவில்லை. இந்தியா ஒரு அற்புதமான நாடு. அதன் கலாச்சாரம் மற்றும் மக்கள் மிகவும் அழகாகனது. மக்கள் நம்பமுடியாத அளவிற்கு குழந்தைகளை வரவேற்பதை நான் அங்கே கண்டேன். மக்கள் என் மகள் மில்லாவை வரவேற்றது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் கொல்கத்தாவில் நான்கு மணிநேர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது அங்கே வித்தியாசமான வாழ்க்கை இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருந்தது. இந்தியா பரபரப்பாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. தெருக்களில் இசை இருந்தது; நான் அதை விரும்பினேன். மும்பையும் நம்பமுடியாததாக இருந்தது. உணவு ஆச்சரியமாக இருந்தது." என கூறினார்.