மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணமே அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான். அவர் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் எனக் கூறி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது 3 விக்கெட்கள் வீழ்ந்த பின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் - நான்காம் வரிசை வீரர் மார்னஸ் லாபுஷேன் ஜோடி சேர்ந்தனர்.
அவர்களை அவுட் ஆக்க முடியாமல் தவித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இடையே மிடில் ஓவரில் அவர்களில் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றிக்கான கதவு திறக்கும் என்ற நிலையில் பும்ராவை அழைத்தார் ரோஹித் சர்மா.

பும்ரா வீசிய ஓவரில் பந்து லாபுஷேன் காலில் பட்டது. இந்திய அணி எல்பிடபுள்யூ அவுட் கேட்ட போது கள அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ அவுட் தரவில்லை. அதனால், இந்தியா ரிவ்யூ கேட்டது. அதில் பந்து லெக் ஸ்டம்ப்பில் படுவது தெரிந்தது. பந்து மிடில் ஸ்டம்ப் அல்லது ஆஃப் ஸ்டம்ப்பில் பட்டால் மட்டுமே அது எல்பிடபுள்யூ அவுட் ஆகும். ஆனால், லெக் ஸ்டம்ப்பில் பட்டால் கள அம்பயர் முதலில் என்ன முடிவை எடுத்தாரோ அதுவே இறுதியானது.
கள அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ இதற்கு அவுட் கொடுத்து, ஆஸ்திரேலியா அதை ரிவ்யூ செய்து இருந்தால், இது அவுட் ஆகி இருக்கும். ஆனால், அவர் அவுட் தர மறுத்ததால் இந்தியா ரிவ்யூ செய்த நிலையில், கள அம்பயரின் முடிவே இறுதியானது என்பதால் இந்தியாவிற்கு எதிராக அந்த முடிவு அமைந்தது.
அதன் பின் லாபுஷேன், ட்ராவிஸ் ஹெட் இணைந்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்ட மைக்கேல் வாகன், இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் இறுதிப் போட்டியின் நட்சத்திர வீரர். அவர் மட்டும் கை தூக்கி இருந்தால் கதையே மாறி இருக்கும் எனக் கூறி இருக்கிறார்.