Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி நடக்குமா? மழை குறித்த வானிலை அறிக்கை

நவி மும்பை: 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 30) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நவி மும்பையில் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பிற்பகலில் வானம் தெளிவடையும் என்றும், போட்டி தொடங்கும் நேரமான மாலை 3 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% ஆகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

India Vs Australia Women s World Cup 2025 Semi-final Weather Will Rain Play Spoilsport In Navi Mumbai

இரவு 7 மணிக்குப் பிறகு மழை அச்சுறுத்தல் மேலும் குறைந்து 4% வரை மட்டுமே இருக்கும் என்பதால், ஆட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். அதிக ஈரப்பதம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்.

கடந்த சில நாட்களாக மும்பையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்தியாவின் கடைசி லீக் போட்டியான வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் கொங்கன் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே இந்த மழைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்?

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி ஒதுக்கியுள்ள 'ரிசர்வ் டே' (Reserve Day) விதிமுறைகள் இந்திய ரசிகர்களுக்கு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில், போட்டி நாளான இன்று (அக்டோபர் 30) ஓவர்களைக் குறைத்தாவது முழு ஆட்டத்தையும் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு ஆட்டம் முடிவை எட்ட, இரு அணிகளும் தலா 20 ஓவர்களாவது விளையாட வேண்டும்.

திட்டமிடப்பட்ட நாளில் குறைந்தபட்ச ஓவர்கள் வீச முடியாமல் போனால், ஆட்டம் அடுத்த நாளான ரிசர்வ் டே-க்கு (அக்டோபர் 31) ஒத்திவைக்கப்படும். ஆட்டம் எந்தப் புள்ளியில் நின்றதோ, அங்கிருந்து அடுத்த நாள் தொடரும். ஒருவேளை, போட்டி நாளிலும், ரிசர்வ் நாளிலும் மழை தொடர்ந்து குறுக்கிட்டு, ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால், லீக் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

ஐசிசி விதிமுறைகளின்படி, ஆஸ்திரேலியா லீக் சுற்றில் தோல்வியடையாமல் முதலிடம் பிடித்ததாலும் (13 புள்ளிகள்), இந்தியா நான்காவது இடத்தில் (7 புள்ளிகள்) இருந்ததாலும், மழையால் போட்டி முழுவதுமாகக் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

Story first published: Thursday, October 30, 2025, 8:19 [IST]
Other articles published on Oct 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+