IND vs AUS: "சல்யூட் ஜெய்ஸ்வால்".. ரவுண்டு கட்டி அடித்த ஆஸ்திரேலியா.. கெத்து காட்டிச் சென்றார்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய வீரர்களின் பல்வேறு சீண்டல்களையும் எதிர்கொண்ட நிலையிலும் 208 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் எடுத்தார்.
அவரது விக்கெட் சர்ச்சைக்குரிய முறையில் வீழ்த்தப்பட்டது. எனினும், அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 474 ரன்கள் எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 369 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில், இந்திய அணி போட்டியை டிரா செய்ய முயற்சி செய்தது.
துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டுமே இந்திய அணியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினார். ரிஷப் பண்ட் அவருக்கு அடுத்து அதிகபட்சமாக 104 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கிடையே ஆஸ்திரேலிய வீரர்கள் ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்த பல்வேறு உத்திகளை கையாண்டனர்.
மிட்செல் ஸ்டார்க் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய நின்று இருந்தபோது ஸ்டம்ப்பில் இருந்த பெயில்ஸ்-ஐ மாற்றி வைத்தார். சமீபகாலமாக பெயில்ஸ்-ஐ மாற்றி வைத்தால் விக்கெட் கிடைக்கும் என்ற போக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பேட்ஸ்மேன் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தார் மிட்செல் ஸ்டார்க்.
இரண்டு முறை பெயில்ஸ்-ஐ மாற்றினார் ஸ்டார்க். அப்போது ஜெய்ஸ்வால் சற்று கோபமடைந்து சில தவறான ஷாட்களை ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் இருந்தார். மேலும், பவுண்டரிகளை அடித்து அரை சதம் அடித்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஜெய்ஸ்வாலுக்கு மிக அருகே ஃபீல்டிங் நிறுத்தப்பட்டார்.
அவர் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய தயாராகும் போதெல்லாம் சத்தம் எழுப்பியும், கூச்சலிட்ட படியும் இருந்தார். அதன் மூலம் அவரது கவனத்தை திசை திருப்ப முயன்றார் சாம் கோன்ஸ்டாஸ். மறுபுறம் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய போதும் ஜெய்ஸ்வாலுக்கு மிக அருகில் கீப்பிங் நின்று இருந்தார்.
அதன் மூலம் ஜெய்ஸ்வால் தனது இயல்பான ஆட்டத்தை ஆட முடியாதபடி செய்ய ஆஸ்திரேலிய அணி முயற்சி செய்தது. இப்படி பல்வேறு முயற்சிகள் நடந்த போதும் ஜெய்ஸ்வால் 208 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 82 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் ஆட்டம் இழந்த பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்து 155 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களிலேயே ஜெய்ஸ்வால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது பாராட்டை பெற்று வருகிறது. அவர் ஆட்டமிழந்த பின் இந்திய அணி வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர்.


Click it and Unblock the Notifications