சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலுக்கு வேண்டுமென்றே பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடத் துவங்கிய சில நிமிடங்களில் கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளர் செய்வதாக அறிவித்தார். கே.எல் ராகுலுக்கு மேலும் சில நிமிடங்கள் வாய்ப்பு அளித்து இருந்தால் அவர் அரை சதம் அடித்து இருப்பார்.
ஆனால், அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இருந்தது அவருக்கு மேலும் அழுத்தத்தை அளிக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி இருக்கிறார். அதேபோல, முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலியும் இதே விஷயத்தை சுட்டிக் காட்டி கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா கே எல் ராகுலுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என குற்றம் சுமத்தி இருக்கிறார்.

கே எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் பல சிறப்பான இன்னிங்க்ஸ்களை ஆடி இருக்கிறார். ஆனால், அதே சமயம் அவர் தொடர்ந்து அவ்வாறு சிறப்பாக ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரது டெஸ்ட் போட்டி சராசரி வெறும் 34 ஆக மட்டுமே உள்ளது. அவர் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராகவும், மிடில் ஆர்டரிலும், பின்னர் ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையிலும் கூட பேட்டிங் செய்துள்ளார்.
தற்போது சென்னை டெஸ்ட் போட்டியில் அவர் ஆறாவது வரிசையில் பேட்டிங் செய்து இருந்தார். இந்திய அணிக்காக எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கும் கே எல் ராகுலுக்கு அணி நிர்வாகம் நிரந்தரமாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனமும் உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே எல் ராகுல் மிக நிதானமாக விளையாடி 16 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அதனால், அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கே எல் ராகுல். இரண்டாவது இன்னிங்க்ஸில் ரிஷப் பண்ட் சதம் அடித்து ஆட்டம் இழந்த பின், கே எல் ராகுல் களமிறங்கினார். அப்போது சுப்மன் கில்லும் சதம் அடித்து இருந்தார். மறுபுறம், கே எல் ராகுல் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து இருந்தார்.
அப்போது இந்திய அணி 514 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அத்துடன் கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளர் செய்வதாக அறிவித்தார். மூன்றாவது நாளின் பின்பகுதியில் அவசரமாக டிக்ளர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதே ஆகாஷ் சோப்ரா மற்றும் பாஸித் அலியின் கேள்வியாக உள்ளது.
இந்த போட்டியில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இல்லை. இரண்டு முழு நாட்கள் மீதம் உள்ளன. இந்த நிலையில், கே எல் ராகுலுக்கு அரை சதம் அடிக்கும் வாய்ப்பை அளித்து இருந்தால் அவர் தன்னம்பிக்கை பெற்றிருப்பார். இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள நிலையில் அவர் இந்த தொடரிலேயே தன்னம்பிக்கை பெறுவது அவசியமாகும்.
அதற்கான வாய்ப்பு நியூசிலாந்து தொடரிலோ, ஆஸ்திரேலியா கிடைக்காது. எனவே, அனுபவம் வாய்ந்த கே எல் ராகுலுக்கு அரை சதம் அடிக்கும் வாய்ப்பை அளிக்காதது தவறு என ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது இந்திய அணியில் கே எல் ராகுலுக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் விளையாடவும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் கே எல் ராகுலுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படும். அந்த போட்டியில் அவர் சரியாக ரன் குவிக்காமல் போனால் நிச்சயமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ராகுலுக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார். எனவே, கே எல் ராகுல் அழுத்தத்துடன் கான்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.