இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நிச்சயம் நடக்கும் ஆனா ஒரு சிக்கல்.. தமிம் இக்பால் தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ரத்தாகும் அபாயத்தில் உள்ளன. இரு நாட்டு அரசியல் சூழ்நிலை மற்றும் சர்வதேச அட்டவணை காரணமாக இந்தத் தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடரை நடத்துவதற்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் மற்ற சர்வதேச தொடர்களுக்கு இடையே போதிய நாட்கள் உள்ள அட்டவணையை தேடி வருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் (பிசிபி) தலைவர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.
முதலில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தொடர், பின்னர் 2026 செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாத இறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளதால், தற்போதைக்கு இந்தத் தொடரை நடத்துவதற்கு கால அட்டவணையில் போதிய நாட்கள் இல்லை.

அதே சமயம் இந்தத் தொடர் முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை என்று தமீம் இக்பால் கூறியுள்ளார். இது குறித்து கிரிக்பஸ் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இந்திய தொடர் ரத்தாகிவிட்டதாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. பிசிசிஐ மற்றும் பிசிபி ஆகிய இரு வாரியங்களும் இந்தத் தொடரை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளன. இதற்கான புதிய கால அட்டவணையை நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இதில் இரு வாரியங்களின் எண்ணமும் மிகவும் சாதகமாக உள்ளது" என்றார்.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வங்கதேசம் மறுத்ததால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதாலும், ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பிறகான அரசியல் சூழ்நிலைகளாலும் இரு வாரியங்களுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.
ஆனால் தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவு சீராகியுள்ளதாகவும், இந்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் வங்கதேச சுற்றுப்பயணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications

