கொழும்பு : தொடர்ந்து சொதப்பலாக பந்து வீசி வரும் ஷர்துல் தாக்குருக்கு அணியில் வாய்ப்பு அளித்து வருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
அவர் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுக்கிறார் என்பதே அதற்கு முக்கிய காரணம். அதே போலவே, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆனால், வழக்கம் போல ரன்களை வாரிக் கொடுத்து மொத்த அணியையும் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார்.

இந்தியா - வங்கதேச அணிகள் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மோதின. ஏற்கனவே, இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அதனால், இந்த போட்டி இரு அணிகளுக்குமே பயிற்சி போட்டியாக மாறியது.
இந்திய அணி அதிரடியாக விராட் கோலி, பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ், சிராஜ் என ஐந்து வீரர்களை வெளியே அமர வைத்து விட்டு, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, ஷமி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெற்ற போதே இன்று எவ்வளவு ரன்களை கொடுக்கப் போகிறாரோ என்ற எண்ணம் வந்தது. இதற்கு முந்தைய பாகிஸ்தான் போட்டியில் அந்தப் போட்டி சூழ்நிலை காரணமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசி குறைவாக 16 ரன்கள் கொடுத்து இருந்தார். ஆனால், கத்துக்குட்டி அணியான நேபாள அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 26 ரன்கள் (ஓவருக்கு 6.50 ரன்கள்) கொடுத்து இருந்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் தலா 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நினைத்தது போலவே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இது நல்ல விஷயம் தான். ஆனால், 65 ரன்களை வாரிக் கொடுத்தார். இதில் 5 ரன்கள் வைடு மூலம் வந்தது.
இவரது ரன்களை அள்ளி வீசிய பந்துவீச்சால் வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்த போதும் 265 ரன்களை குவித்துள்ளது. மேலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தி அழுத்தம் கொடுத்தாலும், ஷர்துல் அடுத்த ஓவரிலேயே ரன்களை கொடுத்து அதை உடைத்து விடுகிறார்.
வெறும் விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே இவர் நல்ல பந்து வீச்சாளர் ஆகி விடுவாரா? என்பதே பலருக்கும் எழுந்துள்ள கேள்வி. இதே போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களான ஷமி 8 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியும், பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியும் இருக்கின்றனர்.
இவர்கள் தாக்குரை விட குறைவாக் விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் போட்டியை இந்திய அணியின் கட்டுப்பாட்டில் வைக்க பெரிய அளவில் உதவி செய்துள்ளனர். இந்த ஆட்டம் பயிற்சி போட்டி போன்றது தான் என்றாலும் ஷர்துல் தாக்குர் நிலை என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதே நிலையில், உலகக்கோப்பையில் சில போட்டிகளில் ஷர்துல் தாக்குரை ஆட வைத்தால் என்ன ஆகும் என்ற எண்ணமே ரசிகர்களின் பயத்துக்கு முக்கிய காரணம்.