IND vs BAN: எங்க பேச்சை மீறுகிறாயா.. டீமில் இடமில்லை.. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை கழட்டி விட்ட பிசிசிஐ
மும்பை: வங்கதேச டெஸ்ட் தொடருக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் டிராபி டெஸ்ட் போட்டியில் அவர் 39 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அதன் மூலம் தனக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
ஆனால், பிசிசிஐ அவரை முற்றிலுமாக புறக்கணித்து இருக்கிறது. பிசிசிஐ பேச்சை அவர் மீறியதால் தான் அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருக்கு முதுகில் வலி இருந்ததால் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால், அவரது பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் அவரை இந்திய அணி நிர்வாகம் அணியை விட்டு நீக்கியதாக விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். அப்போது அவரை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அதை கண்டு கொள்ளவில்லை. அவர் முதுகில் தனக்கு வலி இருப்பதாக கூறியதோடு ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்காமல், ஐபிஎல் அணியின் பயிற்சி முகாமில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
அதை அறிந்து பிசிசிஐ அவர் மீது கடும் கோபம் கொண்டது. அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் அதன் பின் ரத்து செய்யப்பட்டது. அவரை ஒருநாள் அணி, டி20 அணியில் இருந்தும் நீக்கியது பிசிசிஐ. அதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதன் பின் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக துலீப் டிராபி எனும் உள்ளூர் டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம் பெறலாம் என திட்டமிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா டி அணியில் இடம் பெற்று இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக அரை சதம் அடித்தார். அதன் மூலம் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், மாற்று வீரர்களாக சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிசிசிஐ-க்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீதான கோபம் இன்னும் விலகவில்லை என்பதையே இந்த அணித் தேர்வு காட்டுவதாக பல ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.


Click it and Unblock the Notifications