கிரிக்கெட்டில் முதல் எதிரியே நீங்க தான்.. கொக்கரிக்கும் வங்கதேசம்.. இந்த சம்பவம் தான் காரணம்
சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. அதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் மோத உள்ளன. நீண்ட காலத்துக்கு பின்பு இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.
இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கிறதோ, இல்லையோ வங்கதேசத்தில் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் வங்கதேசம், இந்தியாவை கிரிக்கெட்டில் முக்கிய எதிரி நாடாக பார்ப்பது தான். இதற்கு அச்சாரமிட்ட சம்பவம் 2015 உலகக் கோப்பையில் நடந்தது. 2015 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் கால் இறுதிப் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ரோஹித் சர்மா 90 ரன்கள் எடுத்திருந்தபோது ரோபல் உசேன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்தார். ஆனால், அம்பயர் அதை இடுப்பு உயரத்துக்கு மேல் வீசப்பட்ட நோ பால் என அறிவித்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அம்பயர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக வங்கதேச ரசிகர்கள் மற்றும் வங்கதேச அணியின் வீரர்கள் கொந்தளித்தனர்.
பின்னர், ரோஹித் சர்மா 137 ரன்கள் சேர்த்தார். இந்தியா 50 ஓவர்களில் 302 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 593 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவில் வங்கதேச ரசிகர்கள் அம்பயரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாகா பல்கலைக்கழக மாணவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
வங்கதேசத்திற்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடந்து இருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். அப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமால், இந்த சம்பவம் குறித்து அப்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் ஸ்ரீனிவாசனிடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்காக தன்னை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோப்பை வழங்க முடியாதபடி செய்து விட்டதாகவும் கூறி மற்றொரு சர்ச்சையை கிளப்பினார். அத்துடன் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
அப்போது வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா அம்பயரின் தவறான முடிவால்தான் வங்கதேசம் தோல்வி அடைந்ததாக பேட்டி அளித்தார். இந்தியா அம்பயரை சாதகமாக பயன்படுத்தி வென்றதாக இந்திய அணி மீது வங்கதேச ரசிகர்கள் கடுமையான கோபம் கொண்டனர். அப்போது முதல் இந்திய அணிக்கு எதிரான போட்டி என்றாலே வங்கதேசத்தில் ஒருவித எதிர்ப்பு மனநிலை ஏற்படும்.
2007 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இதே வங்கதேச அணிதான் இந்தியாவை குரூப் சுற்றுடன் வெளியேற்றி இருந்தது. அந்த ஒரு சம்பவத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி தலைகீழாக மாறியது. அதன் பின்னரே அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சேப்பல் நீக்கப்பட்டு, தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே இந்திய அணி டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளை வென்றது. இந்திய அணியின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு தேவையான அஸ்திவாரத்தையும் உருவாக்க முடிந்தது. அந்த வகையில் வங்கதேசம் இந்திய அணிக்கு மறைமுகமாக உதவி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications