லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 அன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் முதல் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரில் இருக்கும் ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடைசியாக இந்த மைதானத்தில் இந்திய அணி 2021 ஆம் ஆண்டு விளையாடியிருந்தது. அதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், அதே மைதானத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை இந்திய அணி ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதில் இரண்டு வெற்றிகள், நான்கு தோல்விகள் மற்றும் ஒரு டிரா செய்துள்ளது.
அதிகபட்சமாக 2002 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 628 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.
அதேபோல, 2021 ஆகஸ்ட் மாதம் இந்த மைதானத்தில் இந்திய அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது.
இந்த மைதானத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி என்பது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதாகும். இது 2002 ஆம் ஆண்டு கிடைத்தது.
அதேபோல, இந்த மைதானத்தில் இந்திய அணி பெற்ற மோசமான தோல்வி என்பது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 173 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்தது. இது 1959 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நிகழ்ந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிக ஸ்கோர் 228 ரன்கள் ஆகும். இந்தச் சாதனையை திலீப் வெங்சர்க்கர் செய்திருந்தார்.
லீட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் ரோஜர் பின்னி, அனில் கும்ப்ளே மற்றும் குலாம் அஹ்மத் ஆகியோர் ஆவர். அவர்கள் மூவரும் தலா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கடைசி மூன்று முக்கிய கேப்டன்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூவரும் லீட்ஸ் மைதானத்தில் ஒரு வெற்றி கூட பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதிக சாதகமற்ற லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணியை புதிய கேப்டனான சுப்மன் கில் வழிநடத்த இருக்கிறார். இது அவருக்கு நிச்சயம் ஒரு சவாலாகவே அமையும்.
சுப்மன் கில் தனது முதல் கேப்டன்சியிலேயே இந்தச் சவாலான மைதானத்தில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.