
ஆட்ட நேர முடிவு
நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதிர்ச்சி தொடக்கம்
இந்நிலையில் இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் வெளியேறினார்கள். கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா - முகமது ஷமி யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடினர்.

9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்
9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி- பும்ரா ஆகியோரை இங்கிலாந்து பவுலர்கள் முதலில் அசால்டாக நினைத்த நிலையில் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டனர். முன்னணி பேட்ஸ்மேன்களே இங்கிலாந்து பவுலிங்கை எதிர்கொள்ள திணறிய சூழலில் முகமது ஷமி பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பும்ராவும் எதிரணி பவுலர்களை தனது தடுப்பாட்டத்தால் கடுப்பேற்றினார்.

முன்கூட்டியே டிக்ளர்
இதனால் இந்த ஜோடி 9வது விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தது. 9வது விக்கெட்டிற்கு இந்தியாவின் அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். பின்னர் இந்திய அணி 298 ரன்கள் எடுத்திருந்த போது கோலி டிக்ளர் செய்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி வரை களத்தில் இருந்த ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் நாட் அவுட்டாகாமல் இருந்தனர். இதனால் இங்கிலாந்திற்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

தொடக்கமே தடுமாற்றம்
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு போதிய கால நேரம் கிடைக்கவில்லை. கடைசி நாளில் மீதம் 2 செஷன்கள் மட்டுமே இருந்ததால் அதற்குள்ளாக 272 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனால் அதிரடியாக ஆட முயன்ற அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ், டாம்னிக் சிப்லே இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஹமீத் 9 ரன்களுக்கும் பேர்ஸ்டோ 2 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 67/4 என திணறியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களுக்கு நடையை கட்டினார்.

இமாலய வெற்றி
ரூட்டின் விக்கெட்டிற்கு பிறகு சீட்டுக்கட்டை போல மலமலவென விக்கெட்கள் சரிந்தன. ஜோஸ் பட்லர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து நின்ற சூழலில் சிராஜ் அவரின் கதையை முடித்தார். இறுதியில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications











