Shubman Gill: இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் கில் 13 இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து கம்பேக் கொடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடத்தில் தான் விளையாடுவேன் என்று அடம்பிடித்து புஜாராவின் இடத்தை காலி செய்த கில், கடந்த 13 இன்னிங்ஸ்களாக ஒரு முறை கூட அரை சதம் கடக்கவில்லை.
தொடர்ந்து கில் பேட்டிங்கில் தடுமாறி வந்தார். இதனால் அவருடைய இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டது. கில்லுக்கு எதிராக பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி போன்ற வீரர் இல்லாத நிலையில் கில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

132 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் நம்பர் மூன்றாம் இடத்தில் களமிறங்கி தற்போது தான் கில், முதல் சதத்தை அடித்திருக்கிறார். 24 வயதே ஆன கில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 10 சதம் அடித்திருக்கிறார்.
ஒரு நாள் போட்டிகளில் ஆறு சதமும், டெஸ்ட் போட்டியில் மூன்று சதமும் டி20 போட்டியில் ஒரு சதமும் என 24 வயதில் கெத்து காட்டியிருக்கிறார். ஆனால் இதே 24 வயதில் இந்திய வீரர்கள் யார் அதிக சர்வதேச சதம் அடித்திருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 30 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 24 வயதிலேயே சச்சின் 30 சதத்தை அடித்திருக்கிறார் என தெரிந்தவுடன் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
இந்தப் பட்டியலில் விராட் கோலி 21 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கில் பத்து சதம் அடித்து மூன்றாவது இடத்திலும் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தலா 9 சதம் அடித்து முறையே நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள். இதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா 7 சதம் அடித்து முதல் இடத்திலும் கோலி,மாயங் அகர்வால் தலா நான்கு சதம் அடித்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில் ராகுல், ரிஷப் பன்ட், ரஹானே ஆகியோர் தலா மூன்று சதம் அடித்திருக்கிறார்கள். கில்லின் இந்த சதம் மூலம் அவருடைய இடம் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து ரன்கள் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.