விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அந்தப் போட்டி முடிந்த உடன் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சுப்மன் கில்லை வெளியேறுமாறு இந்திய அணி நிர்வாகம் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சுப்மன் கில் கடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. அவரது டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி 30க்கும் கீழ் சரிந்தது. 39 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கும் சுப்மன் கில் 1063 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். கடந்த மாதம் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரன் குவிக்காத அவர், இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ரன் குவிக்கவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்திய அணியில் இருந்து வெளியேறி தற்போது நடந்து வரும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்று பேட்டிங் திறனை மேம்படுத்தி ரன் குவித்தால் மட்டுமே மீண்டும் அடுத்த டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சார்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடி சதம் அடித்தால் மட்டுமே தன்னால் அணியில் தொடர முடியும் என்பதை உணர்ந்த சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது நேரம் நெருங்கியது. இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் அவர்.
இதை அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. சுப்மன் கில் மட்டும் இல்லையென்றால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே தோல்வி அடைந்து இருக்கும். இந்த ஆட்டத்தால் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் சுப்மன் கில். தனக்கு இருந்த கடைசி வாய்ப்பில், சதம் அடித்து அணியில் தன் இடத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டுள்ளார் சுப்மன் கில்.