
இந்தியாவின் சொதப்பல்
முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார் ராகுல். ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. பின்னர் வந்த வீரர்களும் பெரியளவில் சோபிக்காததால் இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

புஜாராவின் தவறு
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் சரியாக செயல்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில் அவர், சட்டீஸ்வர் புஜாரா மிக மோசமாக விளையாடியுள்ளார். அவர் ஆழ்கடலில் எதையோ தொலைத்தது போன்று ஏதும் அறியாமல் விளையாடி வருகிறார். அவர் தனது ஆற்றல் திறன், விளையாட்டு திறன் என அனைத்தையும் இழந்துவிட்டார். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று நினைத்து விளையாடாமல், எப்படியாவது தனது இடத்தை காப்பாற்றி களத்தில் நின்றுவிட வேண்டும் என தடுப்பாட்டம் செய்து வந்தார். இதனை புரிந்துக்கொண்ட ஆண்டர்சன் சுலபமாக விக்கெட் எடுத்தார்.

என்னென்ன தவறுகள்
இந்திய அணி பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா தான், எப்படியாவது நின்றுவிட்டால் போதும் என்பது போல விளையாடினார்.இதே போல தான் ரவீந்திர ஜடேஜாவும். இவர்கள் அனைவருமே நல்ல வீரர்கள். ஆனால் அணியில் இடத்தை தக்கவைக்க பதற்றத்துடன் ஆடி அவுட்டாகி விட்டனர். இவர்களுக்கெல்லாம் மேலாக ரிஷப் பண்ட். அவரின் ஆட்டம் இது கிடையவே கிடையாது. ஒரு ஷாட்டை கூட முழுமையாக ஆடவில்லை. அனைத்து ஷாட்களையுமே அடிக்கலாமா வேண்டாமா என்பது போல தயக்கத்துடன் ஆடி வெளியேறினார். இந்திய அணி இனி மீண்டு வருவது மிகப்பெரும் போராட்டமாக இருக்கும். ஏனென்றால் இங்கிலாந்து வீரர்களின் மனநிலை மிக நம்பிக்கையுடன் உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னிலை
இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சீரான வேகத்தில் ரன்களை அவர்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 100 ரன்களை எளிதாக கடந்தது. பின்னர் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் ரோரி பேர்ன்ஸ் 61 ரன்களுக்கும், ஹசீப் 68 ரன்களுக்கும் வெளியேறினர். இந்த ஜோடியை முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா பிரித்தனர். அதன் பின்னர் வந்த டேவிட் மாலன் - ஜோ ரூட் ஜோடியும் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. 2வது செஷனுக்கு சில ஓவர்கள் முன்பு வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியை விட 188 ரன்கள் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











