புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்களை செய்திருக்கிறது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும். அதுமட்டுமில்லாமல் கடந்த டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் சூரியகுமார் படை இருக்கிறது.

இந்த சூழலில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர்," இந்த தொடர் தற்போது சூப்பராக செட்டாகி இருக்கிறது. எங்களுடைய செயல்பாடு குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கின்றோம். இன்னும் சில இடங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைந்தால் மகிழ்ச்சி தான்".
"இந்த போட்டியில் என்ன செய்வது என்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஏனென்றால் பனிப்பொழிவு இருக்குமா இல்லையா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்து இருக்கிறோம். மார்க் வுட் பதிலாக மகமுதும், ஜெமி ஸ்மித் பதிலாக ஜாக்கப் போத்தலும் திரும்பி இருக்கிறார்கள்" என்று ஜாஸ் பட்லர் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார்,"நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்வோம். அடிப்படை விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். நாங்கள் ராஜ்கோட்டில் நடந்த விஷயங்களை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம். இன்று கூடியிருக்கும் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கை கொடுக்க நாங்கள் முயற்சி செய்வோம்".
"ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது. இதனால் முதலில் பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டு, அதன் பிறகு வெற்றிகரமாக அதனை தக்க வைப்போம் என நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் மூன்று மாற்றங்களை செய்திருக்கிறோம். முகமது சமிக்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங் வந்திருக்கிறார். இதேபோன்று துருவ் ஜூரல் பதிலாக ரிங்கு சிங் வந்திருக்கிறார்.இதேபோல் வாஷிங்டன் சுந்தர் பதிலாக சிவம் துபேவும் இந்திய அணியில் திரும்பி இருக்கிறார். பேட்டிங்கில் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்களை நாங்கள் செய்திருக்கிறோம்" என சூரியகுமார் கூறியுள்ளார்.