முற்றிலும் மாறுபட்டது.. 4வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்.. இந்திய அணிக்கு ஜாக்பாட்!
ஓவல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட், இந்திய அணிக்கு ஜாக்பாட் அடித்தது போல் அமைந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் மட்டும் டிராவானது.
ஹெட்டிங்லியில் கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பியது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்கவும், இங்கிலாந்து அணி வெற்றி பாதையை தொடரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

4வது டெஸ்ட் போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் ஓவல் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்
இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் பிட்ச் அமைந்திருந்தது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த சூழலில், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டியில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஸ்பின்னர்கள் தேவை
அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளிலும் குறைந்தது 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறக்க வாய்ப்புள்ளது. லண்டனில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. ஒருவேளை மழைப்பொழிவு ஏற்பட்டால் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக நன்கு ஸ்விங்காகும்.

மாற்றங்கள்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மொயின் அலி பேட்டிங், பவுலிங் என நல்ல ஃபார்மில் உள்ளார். அதே போல பார்ட் டைம் ஸ்பின்னராக கேப்டன் ஜோ ரூட் இருக்கலாம். ஆனால் இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் களமிறக்கப்படலாம். தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள், மற்றும் ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜா செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கும் சமீபத்தில் காயம் ஏற்பட்டது. எனவே இந்த போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications